search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சேலம் விமான நிலைய விரிவாக்க பணி"

    சேலம் விமான நிலைய விரிவாக்க பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து தற்கொலை மிரட்டல் விடுத்த விவசாயிகள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காடையாம்பட்டி:

    சேலம் விமான நிலைய விரிவாக்கத்திற்காக ஓமலூர் அருகே உள்ள காமலாபுரம் பொட்டியாபுரம், தும்பிப்பாடி, சிக்கனம்பட்டி ஆகிய கிராமங்களில் சுமார் 570 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது.

    முதல்கட்டமாக அரசு புறம்போக்கு நிலத்தை அளவீடு செய்து கையகப்படுத்தப்பட்டுள்ளது. வீடுகளை வைத்துள்ள பொதுமக்கள் தாமாகவே முன்வந்து வழங்கிய நிலத்தில் அளவீடு செய்யும் பணி நடந்து வருகிறது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு நிலம் எடுப்பு தனி தாசில்தார் சாந்தி தலைமையில் நில அளவையர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் தும்பிப்பாடி கிராமத்திற்கு நில அளவீடு செய்வதற்காக சென்றனர்.

    அப்போது அங்கு திரண்டு வந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் விமான நிலைய விரிவாக்க பணிக்காக நிலத்தை ஒப்படைக்க மாட்டோம் என்று கூறியதோடு இங்கு ஆய்வு பணிகள் மேற்கொள்ளக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர்.

    அப்போது சில விவசாயிகள் நிலத்தை அளவீடு செய்தால் கிணற்றில் குதித்து தற்கொலை செய்வோம் என கூறி அங்குள்ள கிணற்று திட்டில் இறங்கி மிரட்டல் விடுத்தனர். இதையடுத்து அதிகாரிகள் நிலத்தை அளக்காமல் அங்கிருந்து திரும்பி சென்றனர்.

    இந்த நிலையில் தாராபுரம் கிராம நிர்வாக அலுவலர் குணசேகரன் தீவட்டிப்பட்டி போலீசில் விவசாயிகள் மீது புகார் கொடுத்தார். அந்த புகாரில் விமான நிலைய விரிவாக்கத்திற்காக நில அளவீடு செய்ய சென்ற வருவாய்த்துறை அதிகாரிகளை அப்பகுதியைச் சேர்ந்த வினோத், கிருஷ்ணன், விஜய், சின்னப்பையன், குமரவேல், எல்லப்பன் உள்பட பலர் தடுத்து நிறுத்தினார்கள், அரசு பணிகளை செய்யவிடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிவித்திருந்தார்.

    இதையடுத்து தீவட்டிப்பட்டி போலீசார் விவசாயிகள் மீது அரசு பணியை செய்யவிடாமல் தடுத்தல், மிரட்டுதல், அச்சுறுத்தும் வகையில் ஒன்றாக கூடுதல், கொலை மிரட்டல் விடுத்தல், ஆகிய 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    ×